Wednesday, August 31, 2016

ஆரிய-திராவிட பொய் கதை - அறிவோமா?

வெள்ளையர்கள் செய்த சதி

வெள்ளையர்கள் பஞ்சு வியாபாரம் செய்ய வந்து, "ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின மாதுரி" , நம்முடைய உள்நாட்டவர்களை ஆதிக்கம்   செய்யத் துவங்கினர். மன்னர் ஆட்சியில் இருந்து அவர்களுடைய அரசாங்கம் ஆகி விட்டது.சமய நூல்களையும் வரலாற்றையும் ஆராய்ச்சி செய்கின்றோம் என்று பிதற்றிக் கொண்டு, வேதங்களையும், ஆகமங்களையும்  மொழி பெயர்ந்தது மட்டும் அல்லாது,  அவர்களுடைய சொந்தக் கதையை உள்ளே நுழைத்து விட்டார்கள். சருமத்தின் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வுகளை உண்டு பண்ணி, கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லாம் வெள்ளை தோல் உள்ளவர்களுக்கு அடிமைகள், என்னும் கருத்தைத் பின்பற்றி வந்த , அந்த  முட்டாள்களுக்கு  அதனைத் தவிர வேறு  ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை போலும். சமுதாயத்தில் உள்ள மக்கள் தத்தம் தொழில்களுக்கு  ஏற்ப 4 வர்ணங்களாகப் பிரித்து, அவரவர் தொழில்களை அவரவர்  செவ்வனே  செய்து வந்த திறனைக் கண்டு பொறுக்க முடியாமல் போனார்கள் அவர்கள் - வேதத்திலும் இந்த வெள்ளையர் ஆதிக்கமே பேசப் படுகின்றது என்று கட்டுக் கதை கட்டினார்கள்.

வேதங்களின் சிறப்பு 

இதில், ஒன்றாக இருந்த வேதங்களை, வேத வியாசர் கலியுகம் துவங்கும் முன்னே  (3-4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்)  நான்காகப் பிரித்தார்.  அப்படி இருக்க, ரிக் வேதத்தில் உள்ள இந்திரனுக்கும் அரக்கனுக்கும்  நடந்த யுத்தம், வெள்ளை கறுப்பர்களுக்கு இடையே நடந்த யுத்தம் என்றும்,  பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றும் எல்லாம் அவர்களுடைய கட்டுக் கதைகளை கட்டி விட்டான் மாக்ஸ் முல்லர் என்ற அந்த வஞ்சகன். எழுதா மறை - என்று குரு சிஷ்ய பரமபரையாக, ஓதப் பெற்ற   நம் வேதங்களை குறை கூறி, கதை கட்டினான் அவன்.

ஆரிய - திராவிட கட்டுக் கதை 

ஐயா என்ற சொல்லே ஆர்யா என்று வடமொழியில் வழங்கப் படுகின்றது. அதே போல் வடமொழியிலே நம் தமிழகத்துக்கு பெயர் தான் - திராவிட தேசம் - அதையே நம் தமிழ் தாய் வாழ்த்தில் "திராவிட நல் திருநாடும்" என்று பாடுகின்றோம். சேர, சோழ, பாண்டிய - தேசங்களே நம்முடைய தமிழகத்தில் இருந்தன. நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை,மருதம் என்ற பிரிவுகளே இங்கு ருந்தன. திராவிட  நாடு என்ற பெயர் எந்த இலக்கியங்களிலும் பெரிதாக பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் , நம்மை எல்லோரையும் முட்டாள் ஆக்கும் வகையிலே இந்தக் கதை அமைந்து உள்ளது.ஆங்கிலத்திலே சார் என்பதை போல், தமிழிலே ஐயா என்பதை போல், வட மொழியிலே மரியாதையைக் குறிக்கும் சொல்லே இந்த ஆர்யா என்பது. மற்றபடி எந்த விதமான பொருளும் அதற்கு இல்ல.

தமிழர்கள் / இந்தியர்கள் ஆகிய நாம் எல்லோரும் ஒன்றே

நம் தமிழகத்தில் உள்ள எல்லோரும் ஒன்றே - அவர்களுடைய மரபணுக்கள் எல்லாம் ஒரே மாதரித்  தான் இருக்கும். அதனை நாம் அந்த வெள்ளைக்காரன் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை. எல்லாக் குலத்திலும் எல்லா விதமான மக்கள் உள்ளனர் இன்று - கருத்தவர்கள், வெளுத்தவர்கள் எல்லாம் எல்லாக் குலத்திலும் உள்ளனர். இதுவே இந்த  ஆரிய திராவிட  கதை பொய் தான் என்பதற்கு ஒரு பெரிய ஆதாரம்.சைவம் தழைத்து ஓங்கி இருந்த காலத்தில், ஜாதி பேதம் இன்றி(வேளாளர்கள், வணிகர்கள், அரசர்கள், பார்ப்பனர்கள்) எல்லோரும் சேர்ந்து சிவத்  தொண்டு செய்தனர்.  சைவத்துக்கு மிகவும் நெருங்கிய மொழியாகிய நம் தமிழ் மொழி, அகத்திய முனிவரால் வளர்க்கப் பெற்றது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை.  தொல்காப்பியம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் இலக்கணத்திற்கு வித்து இட்டவர்கள் அவர்கள் தான். ஜாதி மத பேதம் இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழ் வளர்த்தனர் ஒரு காலத்தில்..

சங்க இலக்கியங்கள் 

சங்க காலப் புலவர்கள், திருவள்ளுவர்,இளங்கோ அடிகள் - இவர்களுக்கு எல்லாம் தெரியாத விஷயம் இந்த மாக்ஸ்  முல்லர் என்ற வஞ்சனுக்குத் தெரிந்து விட்டது போலும். தமிழ் வளர்த்த கபிலர், பரணர் - அவர்களை எல்லம் விட்டு விட்டு, சங்க  புலவர்களுக்கு எல்லாம் தெரியாத உண்மை அந்த வெள்ளையனுக்குத்  தெரிந்து விட்டது போலும்.நம்முடைய சாஸ்திரங்களும், புராணங்களும், தமிழ் இலக்கியங்களும்  -  இந்த வெள்ளைத்தோலும் கருப்பு மனமும் கொண்ட வஞ்சகர்களுக்கு அப்பாற்பட்டது.
இனி   நம் வேதங்களின் சிறப்பை வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறர் என்று பார்ப்போம்:

மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

அதாவது, தான் குருகுலத்தில் கற்ற வேதத்தை மறந்தாலும் கூட மீண்டும் படித்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு பிராம்மணன், தன்னுடைய பிறப்பொழுக்கம்   (சமஸ்கரம்) - அதனை மறந்தால் எப்பொழுதும் மீண்டும் பெற முடியாது என்கிறார் வள்ளுவர். இதனை ஒரு சாதி அல்லது குலத்தைப் பற்றிச் சொல்லும் குறளாக   எடுத்துக் கொள்ளாமல், சங்க காலத்திலே நம் தமிழகத்தில் வேதங்கள் தழைத்து ஓங்கி இருந்தன என்றும், அதனை செவி வழியாகப் படித்தார் என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி என்றால், வள்ளுவருக்குத் தெரியாத விஷயம், இந்த வெள்ளையனுக்குத் தெரிந்து விட்டதா? இல்லவே இல்ல.

ஐம்பெரும் காப்பியங்களுள் முதலாவதான சிலப்பதிகாரத்தில் வேதங்களின் சிறப்பைக் காணலாம் இங்கே:

சிலப்பதிகாரத்தில் வஞ்சினமாலை  என்ற சாபம் கொடுக்கும் படலம் 




யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து 45

மகா பதிவ்ருதை ஆகிய நம் கண்ணகித் தெய்வம், தன்னுடைய கணவனைத் தவறாக கொலை புரிந்த பாண்டிய மன்னன் மீதும் அவன் நகரத்தின் மீதும் தீராக்  கோபம் கொண்டாள்.கண்ணகி பாண்டியன் மீது தீராத கோபம்  கொண்டு, தன்னுடைய இடப்பாகத்து  முலையை, தானே தான் கையால் கிழித்து எடுத்து, மதுரை நகரத்தை மும்முறை வலம் வந்து பிறகு  மதுரை மீது தன்னுடைய  தனத்தை எரிந்து சாபம் கொடுக்கின்றாள்.

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் 
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் 50

சினம் கொண்ட கற்புக்கரசி கண்ணகியின் முன்னர், அக்னி பகவான் ஒரு ப்ராஹ்மண வேஷம் கொண்டு தோன்றினான். அந்த   கற்புத் தெய்வத்தின் ஆக்கினையைப் பெற்று அவன் மதுரையை அழிக்கலுற்றான். இங்கு எரியும் மேலாடை அணிந்த வானவன் என்றால் - சிவ பெருமானையும் பொருள் கொள்ளலாம் - நாயன்மார்கள் சிவனை பொன் கழல்  வண்ணன் என்று போற்றுகின்றனர். ஆனால் தர்மஸ்வரூபி ஆக இருக்கும் அக்னியையும் பொருள் கொள்ளலாம் - பஞ்ச  பூதங்களும் இறைவனின் படைப்பே என்பதால், அவர்கட்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமேஸ்வரனையே குறிக்கும் என்று பொருள் கொள்ளலாம்.

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55

கண்ணகி  தீக்கடவுளுக்கு  ஆணை இட்டாள்.
  1. பார்ப்பனர் (ப்ராஹ்மணர்)
  2. தருமம் தவறாமல் இருக்கும் சான்றோர்கள்
  3. பசு மாடுகள்
  4. பத்தினிப் பெண்கள்
  5. வயது முதிர்ந்த மக்கள்
  6. சின்னக் குழந்தைகள் 
ஆகிய இவர்களை விட்டு மற்றவர்களை எரித்து விடுமாறு அக்னிக்கு ஆணை இட்டாள்   நம் கற்புக்கரசி கண்ணகி. சங்ககாலம் தொட்டதே இந்த மரபு இருந்து வந்தது நமக்குத் தெரிகின்றது. பத்தினிப் பெண்கள் தங்கள் கோபத்திலும் கூட, தர்மத்திற்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.அதாவது நாடு செழிக்க, அக்னி காரியம் செய்து, நட்டு நலனுக்காக வேள்விகள் நடத்தும் பொருட்டு பிராம்மணரும், தத்தம் வர்ணாஸ்ரம தர்மங்களை எல்லாம் தவறாமல் காப்பாற்றும் தர்மசீலர்களும், தம்முடைய பாலைப் பொழிவதால் பசுக்களையும், தம்மைத் தாமே கத்துக் கொள்ள முடியாத முதியவர் மற்றும் சிறு குழந்தைகள் ஒழிய எல்லோரயும் எரித்து விடுமாறு ஆணை இட்டாள் நம் பத்தினித்தெய்வம் கண்ணகி. தர்மம் சாஸ்திரங்கள் கூறும் விஷயத்தை அப்படியே சொல்லி இருக்கின்றாள் பாருங்கள்.

சிலப்பதிகாரத்தில் கட்டுரைக்கு காதையில்:

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 

மதுரை எரித்த கண்ணகிக்கு,  மதுரைத் தெய்வம் மீனாட்சி வரம் கொடுக்க, சேர நாடு நோக்கிச் செல்கின்றாள் - அப்பொழுது பராசரன் என்ற பிராம்மணன் , அவளுக்கு சேர நாட்டின் பெருமைகளை சொல்வது போன்று அமைந்த பாடல் இது.

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 70

சாஸ்திரங்களில் சொல்லப் பெற்ற விஷயங்களை எல்லாம் இளங்கோ அடிகள் மிகவும் துல்லியமாகக் கூறுகின்றார் - இரு பிறப்பாளர்(துவிஜா), 5  வேள்விகள் (ரிஷி,தேவ,பித்ரு,புத்த,அதிதி), 3 தீ  மற்றும் ஆறு தொழில் (வேதம் கற்றல் மற்றும்  கற்றுவித்தல், வேள்விகள் செய்தல்செ மற்றும் செய்வித்தல் , தானம் கொடுத்தால் மற்றும் வாங்கி கொள்ளுதல்) ஆகிய அந்தணர்களை பேணிய மன்னன் - என்று தர்மம் சாஸ்திரங்கள் கூறும் பெருமைகளை எல்லாம் இங்கு சொல்கின்றார் நம் இளங்கோ அடிகள்.

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்

இப்படி எல்லாம் உள்ள அந்த பராசரன் என்ற பிராம்மணன் - சேர நட்டு அரசனின் பெருமைகளைப் படும் பொருட்டு சொல்லும் வசனம் இது. என்ன அருமை பாருங்கள்.

வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காண

அதாவது வட தேசத்தில் இருந்த மன்னர்களை வென்று, இமயம் முதல் குமாரி வர ஒரே அரசாக ஆண்ட பெருமை கொண்ட பாண்டிய மன்னன் என்று கூறுகின்றார் நம் இளங்கோ அடிகள். இங்கு அவர் ஆரியர்   - என்பது ஒரு இனம் என்றெல்லாம் குறிப்பிடவே இல்லை(வட தேசத்து மக்களைக் குறிக்கும் சொல் தான் அது).

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் 
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி 
விண்ணக மாதர்க்கு விருந்து. 

கண்ணகி என்ற பத்தினியின் பெருமை எப்படிப்பட்டது என்று பாருங்கள். புராணத்தில் சொல்லப் பெற்ற சாவித்ரி, நளாயினி போன்று- அதையும் தண்டி தான் கணவனைக் கொன்ற மன்னனையும், அவன் தேசத்தையும்  எரித்து, முன்வினைப் பயனே என்று மதுரைத்தெய்வம்   மீனாட்சி இடத்தில,  சொல்லப்ற்று, தான் கணவனோடு ஒன்றாக ரத்தத்தில் சுவர்க்கம் சென்ற பெருமை கொண்டவள் நம் கண்ணகி. நம் இந்தியர்களுக்கும்  தமிழர்களுக்கும் கற்பு  என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

தமிழகம் மற்றும் நம் தேசத்தின் பெருமை 

யாராலும் அசைக்க முடியாத நம் கலாச்சாரத்தைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளை வஞ்சகர்கள் இந்த மாதிரியான போலிக்  கதைகளை எல்லாம் கட்டினர். இனிமேலேனும் நாம் அனைவரும் முழித்துக் கொள்ள வேண்டும்.இனிமேல் ஆவது நாம் எல்லோரும் ஒன்று என்ற மனோபாவத்துடன் நம் நட்டு முன்னேற்றத்திற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாடு பட வேண்டும்.வெள்ளைக் கலாச்சாரத்திற்கு   கீழானது தான் நம்முடைய நாகரீகம்  என்று வெள்ளைக்காரர்கள் கட்டிய கதை  தான் இது எல்லாம்.

No comments:

Post a Comment